பொங்கல் திருநாளையொட்டி 3184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர், காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு ‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்’ வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர் (சிறப்பு நிலைய அலுவலர்), முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி (சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து), இயந்திர கம்மியர் ஓட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னனி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 119 அலுவலர்களுக்கும். சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண் மற்றும் பெண்) நிலைகளில் 59 பேர்களுக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பொங்கல் உரை: எல்.முருகன் வீட்டில் களைகட்டிய நிகழ்ச்சி!

மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்” வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.

இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.