திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பொங்கல் உரை: எல்.முருகன் வீட்டில் களைகட்டிய நிகழ்ச்சி!
மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தனது இல்லத்தில் கடந்த ஆண்டு நடத்திய பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் பங்கேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டும் தனது இல்லத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு எல்.முருகன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில், வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில், தமிழ் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எல்.முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் பண்டிகையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனை பிரதமர் மோடி உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்று தமிழில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடாகும் எனும் பொருள் கொண்ட, “தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு.” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, 'ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்' என்ற உணர்வை பொங்கல் பண்டிகை சித்தரிக்கிறது என்றார்.
பொங்கல் பண்டிகையை சொந்தக் குடும்பத்துடன் கொண்டாடுவது போல் உணர்கிறேன் என்றும் பிரதமர் மோடி கூறினார். பொங்கல் பண்டிகை 'ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்' என்ற உணர்வை சித்தரிப்பதாகவும், இந்த ஒற்றுமை உணர்வு 'விக்சித் பாரத்'திற்கு பலம் தரும் எனவும் அவர் கூறினார். விக்சித் பாரத்@2047, என்பது 2047 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்து நூறாவது ஆண்டு நிறைவடையும் போது, தேசத்தை ஒரு வளர்ந்த நிறுவனமாக மாற்றுவதற்கான இந்திய அரசின் லட்சிய பார்வையை பிரதிபலிக்கிறது.
“நாடு முழுவதும் நேற்று லோஹ்ரி பண்டிகை கொண்டாடப்பட்டது. சிலர் இன்று மகர சங்கராந்தியை கொண்டாடுகிறார்கள், சிலர் நாளை கொண்டாடுவார்கள், மக் பிஹுவும் வருகிறது, இந்த பண்டிகைகளுக்காக நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு!
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! இந்த புனிதமான தருணத்தில், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், செழிப்பும், மனநிறைவும் பொங்க வாழ்த்துகிறேன். இன்று, எனது சொந்தக் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடுவது போல் உணர்கிறேன்.” என்றார்.