TNGIM2024 மதுரைக்கு ஜீரோ முதலீடு: கருப்பொருளே மிஸ்ஸிங்; தூங்கிக் கொண்டிருக்கும் தூங்கா நகரம்..!
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரைக்கு எந்த முதலீடும் வராதது அம்மாவட்ட மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது
2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற உயரிய கொள்கையை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் ஒருபகுதியாக, உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில், கடந்த இரு தினங்களாக தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டு தினங்களில், முன்னெப்போதும் இல்லாத அளவில் 6,64,180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள், 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட மொத்தம் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே சிறந்து விளங்கும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தும் வகையிலும், மாநிலத்தின் வலுவான, தொழில் சூழலமைப்பு மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் மனிதவளத்தை, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையிலும், இம்மாநாடு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு மார்தட்டிக் கொள்கிறது.
ஆனால், மாநாட்டின் கருப்பொருளையே தவறவிட்டுத்தான் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துள்ளது என வேதனை தெரிவிக்கிறார்கள் மதுரை மாவட்டத்துக்காரர்கள். தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (Leadership, Sustainability and Inclusivity) என்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்பட்டது.
ஆனால், மேற்கண்ட கருப்பொருளில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதற்கான அர்த்தம் என்ன என்று கேள்வி எழுப்பும் மதுரை மக்கள், தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வழக்கம் போல் சென்னை, கோவை, காஞ்சிபுரம், திருச்சி, ஓசூருக்கு அதிக முதலீடுகள் குவிந்துள்ளதாகவும், மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகவும் மதுரை மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
மோடி - ராகுல் ஒப்பீடு: கார்த்தி சிதம்பரத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ்!
மதுரைக்கு எந்த முதலீடும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் வண்ணம், #TNGIMForgotMadurai என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், தமிழக அரசு மதுரை மீது கவனம் செலுத்தவில்லை எனவும், மதுரை புறக்கணிக்கப்படுவதாகவும் மதுரைவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடிக்கணக்கில் முதலீடுகள் செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய மக்கள் தொகை கொண்ட மாநகரமான மதுரையில், எந்த ஒரு நிறுவனமும் முதலீடு செய்யாததால் மதுரையில் வேலைவாய்ப்பும் ஜீரோ சதவீதத்தில் உள்ளது.
மதுரையில் அதன் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அரசாங்கத்திடம் இருந்து எந்தவித முன்னெடுப்பும் இல்லை என நீண்டகாலமாக குற்றம் சாட்டப்படுகிறது. சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கின்றன. எதிரே வரும் வாகனங்கல் தெரியாத வண்ணம் சாலைகள் முழுவதும் புழுதிக்காடாக உள்ளன. இதனால், மக்கள் நோய்வாய்ப்படும் அவலமும் ஏற்பட்டுள்ளது. மதுரையில் எந்த பெரிய நிறுவனங்களும் இல்லை; சிப்காட் இல்லை; தொழிற்பூங்க இல்லை; சுற்றுலா மேம்படுத்தப்படவில்லை; மோசமான நகர நிர்வாகம் இப்படி அடிக்கிக் கொண்டே என ஏற்கனவே மதுரை மக்கள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடும் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படாமல் உள்ளது. விமான நிலையம் சர்வதேச தரத்தில் உயர்த்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்கும் சேவை மந்தகதியில் உள்ளது. மதுரையில் மெட்ரோ, டைடல் பார்க் போன்றவை வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. மதுரையை வாக்கு வங்கிக்காகவும், அரசியல் மாநாடு நடத்தும் இடமாகவும் மட்டுமே அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள். ஜல்லிக்கட்டு, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, சித்திரை திருவிழா, மீனாட்சியம்மன் கோயில், வீரக்கதைகள் என பழம் பெருமைகளை பேசிக் கொண்டே எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தூங்கா நகரம் தூங்கிக் கொண்டுள்ளது.