விவசாயிகள் தற்கொலை குறித்து விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது குறித்து தனியார் அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தது. 

இது குறித்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விவசாயிகள் தற்கொலை குறித்து பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் வறட்சி காரணமாக தமிழகத்தில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை மூன்று நீதிபதிகள் தலைமையிலான அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. ஆனால் அந்த அமர்வில் எந்தெந்த நீதிபதிகள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படவில்லை.இதற்கிடையே தீபக் மிஸ்ரா, கன்வில்கர், சந்தான கவுடா அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.