சிவகங்கை

இரண்டு இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் காவிரி, குண்டாறு, வைகை நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பேரணியும், பின்னர் மாநாடும் திருப்புவனம் ஒன்றியம் மடப்புரத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில், “இரண்டு இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் காவிரி, குண்டாறு, வைகை நதிகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். 

மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சனையை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தமிழகத்தில் விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,

பால் கொள்முதலில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் விவசாயிகள் சங்கத்திற்கு புதிய மாவட்ட தலைவர் ஏ.ஜெயராமன், செயலாளர் ஏ.ஆறுமுகம், பொருளாளர் கே.வீரபாண்டி, துணைத் தலைவர்கள் அண்ணாதுரை, ஜோதிநாதன், துணைச் செயலாளர்கள்- மோகன், சந்தியாகு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மாநாட்டில் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஐயம்பாண்டி வரவேற்றார். மாநிலச் செயலாளர் விஜயமுருகன், தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாநிலச் செயலாளர் கந்தசாமி, விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.கே.மாணிக்கம், மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தண்டியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.