Tamil Nadu Farmers Association request to give pension to farmers

அரியலூர்

அரியலூரில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில், “60 வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூரில் சனிக்கிழமை இரவு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு அச்சங்க மாவட்டத் தலைவர் மணியன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் புனிதன், கரும்பு விவசாயிகள் சங்கச் செயலர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலர் வரப்பிரசாதம் வரவேற்றார்

இதில், “விவசாயிகளின் தற்கொலையை தடுத்திட விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

50 சதவீத மானியத்தில் விவசாய இடுபொருள்கள் வழங்கிட வேண்டும்.

60 வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

புள்ளம்பாடி வாய்க்காலை தூர்வார வேண்டும்.

மணல் கொள்ளையை தடுத்திட வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ச் செயலர் செல்லத்துரை, மாவட்ட துணைத் தலைவர் பிச்சைப்பிள்ளை, மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மாநில மகளிரணிச் செயலர் மாரியம்மாள், மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத் தலைவர் முகமது அலி பங்கேற்று சிறைப்புரையாற்றினார்.