Tamil Nadu dairy minister Rajendra Balaji s bizarre logic Target on Sasikala
தமிழகத்தில் இதுவரை எந்த அமைச்சரும் செய்திராத சாதனையை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்திருக்கிறார். ‘தனியார் பாலில் ரசாயனம் கலக்கபடவில்லை என்பதை நிரூபித்தால் தூக்கில் தொங்குகிறேன்.’ என்று சவால் விட்டதன் மூலம் ஆறு ஆண்டுகளாக அமைச்சர் பதவி எனும் சீட்டை தேய்த்துக் கொண்டுதான் இருந்திருக்கிறேன் என்பதை பொசுக்கென நிரூபித்திருக்கிறார்.
ஆவின் மட்டுமே சுத்தமான பாலை வழங்குவதாகவும், தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலந்த பாலை விற்பனை செய்வதாகவும் சில நாட்களுக்கு முன் ஒரு பட்டாரை பற்றவைத்தார் பாலாஜி. வாவ்! ஒரு அமைச்சரே முறைகேட்டின் தோலை உரிக்கிறாரே என்று நிமிர்ந்து அமர்ந்தது தமிழகம். ஆனால் அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தனியார் பால் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தபோது ‘கலப்படம் செய்யும் பால் நிறுவனங்களிடம் காசு வாங்கி சாப்பிட்டால் அது மனித... உண்பதற்கு சமம்’ என்று அவர் தாக்கியபோது பிரச்னையின் ரூட் வேறு திசையில் பயணிக்க துவங்கியது. எதிர்கட்சியினரும் ‘பாலாஜியின் இந்த திடீர் பால் பாசத்துக்கு பின்னாடி ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது.’ என்று எடுத்துக் கொடுத்தனர்.
இந்நிலையில் ‘தனியார் பால் நிறுவனங்கள் தங்களது பாலில் ரசாயன பொருட்களை கலப்பதில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் நான் தூக்கில் தொங்க தயார்.’ என்று சவால் விட்டிருக்கிறார்.
இதன் மூலம் பாலாஜியின் அமைச்சரின் அதிகார வரன்முறைகளை பற்றிய தெளிவும், அறிவும் வெளிப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலின் முன் வரிசையிலிருக்கிறது பால். அதை விநியோகிக்கும் தனியார் நிறுவனங்கள் அது பல நாட்கள் கெட்டுப்போகாமலிருக்க ரசாயனத்தை கலக்கிறார்கள் என்பது பாலாஜிக்கு ஆணித்தரமாக தெரிந்திருக்கிறது.
ஏனென்றால் ‘நான் சொல்வது தவறானால் தூக்கில் தொங்குகிறேன்.’ என்று ஒரு அமைச்சர் சொல்கிறார் என்றால் அவர் எந்தளவுக்கு அந்த விஷயத்தில் க்ளியர் கட் ஆக இருக்கிறார் என்பது புரிகிறது. அப்படியானால் தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தனியார் பால் நிறுவனங்களுக்கு மளமள ரெய்டை நடத்தி, ரசாயன கலப்பு உண்மையென்றால் ஆன் தி மொமண்டிலேயே அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்திருக்கலாம். இதற்கு எல்லா அதிகாரமும் அமைச்சருக்கு இருக்கிறது. ஆள், அம்பு ,சேனை என்று சட்ட ரீதியில் அத்தனை சப்போர்ட்டுகளும் அவருக்கு சல்யூட் அடித்தபடி இந்த ஆபரேஷனுக்கு வந்து நிற்கும். ஒரு வேளை தனியார் நிறுவனங்கள் கோர்ட்டுக்கு போனால் நீதிபதிகளும் அமைச்சரின் ஆரோக்கிய அதிரடிக்கு ஒரு பூங்கொத்து தருவார்கள்.
.jpg)
அதைவிடுத்து ‘தனியர் பால் நிறுவனங்களின் பால் மாதிரியை மத்திய அரசின் ஆய்வகங்களுக்கு ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம். அதில் உண்மை தெரியவரும்.’ என்று சொல்வது இந்த தேசத்தில் பல பிரச்னைகளுக்கு வைக்கப்பட்ட விசாரணை கமிஷன் கதைதான்.
’தனியார் பாலில் ரசாயன கலப்பு இருப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிதானே அமைச்சர்?’ என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நறுக்கென கேட்டிருக்கிறார். இப்படியொரு யதார்த்த கேள்வியை கேட்க ஸ்டாலின் தேவையில்லை பக்கத்துவீட்டு பக்கிரிசாமியே போதும்.
ஆய்வு செய்யவும், நடவடிக்கை எடுக்கவும் முழு அதிகாரம் இருக்கையில், தொடர்ந்து வாய் வார்த்தைகளால் வாண வேடிக்கை காட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த பரபரப்பின் மூலம் எதிர்பார்ப்பது என்ன? அவர் யாருக்கு என்ன சொல்ல வருகிறார்? என்பதே சாமான்ய தமிழனின் கேள்வி.

இந்த இடத்தில் இன்னொரு டவுட்டும் எழுகிறது. சசிகலா குடும்பத்துக்கு சொந்தமாகவும் ஒரு பால் நிறுவனம் இருக்கிறது என்று பல வருடங்களாய் பொதுஜனம் வரை பரவியிருக்கும் ஒரு தகவல். அப்படியானால் ராஜேந்திர பாலாஜி சொல்வது போல் தனியார் பால் நிறுவனங்களில் ஒன்றான சசி டீம் கம்பெனியும் இந்த கொடூரத்தைத்தான் செய்கிறதா? ஒருவேளை மக்களுக்கு ரசாயன பால் வடிவில் ஸ்லோ விஷத்தை தரும் தனியார் பால் நிறுவனங்களை பற்றி புகார் கிளப்பி சசிகலா நிறுவனத்தையும் டார்கெட் செய்கிறாரா அமைச்சர்.
ஒருவேளை எல்லோரும் நம்பிக்கொண்டிருப்பது போல் அந்த பால் நிறுவனம் சசிகலாவுடையது இல்லை என்றால் அதை இந்த நேரத்திலாவது வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய பொறுப்பு சசிகலாவின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இருக்கிறது.
எது எப்படியோ இந்த விவகாரத்தில் அமைச்சர் நேர்மையாக எல்லாவற்றையும் நிரூபிக்க வேண்டியது அவசரம் மட்டுமல்ல அவசியமும் கூட. அடுத்த பரபரப்பில் தமிழகம் இதை மறந்துவிடும் என்று அவர் இதை கைகழுவுவாரேயானால், தூக்கில் தொங்கப்போவது இந்த அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான்.
