நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் கொட்டும் மழையில் தமிழக முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியேற்றினார். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த ஜீப்பில் காவல் துறையின் அணிவகுப்பினை பார்வையிட்டார்.காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். 

சுதந்திர தின விழா; முதல்வர் பழனிசாமி உரை

நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2-வது முறையாக சுதந்திர தின கொடியேற்றியதில் பெருமை கொள்கிறேன் என்றார். தியாகச் செம்மல்கள் வாழ்ந்த இடம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வரலாற்று நாயகர்களை நாம் என்றும் போற்றி வணங்க வேண்டும். இந்திய சுதந்திர போராட்டத்திற்கான வேள்வி தமிழகத்தில் தான் துவங்கியது என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்றார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்திவருகிறதாக தெரிவித்துள்ளார்.

 

ஆயுதப் போரிலும், அறப்போரிலும் அதிக பங்காற்றியது தமிழகம் தான். சுதந்திர போராட்ட வீரர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் ரூ.22,439 கோடி மதிப்பீட்டில் 41,031 திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 2018-19 நிதி ஆண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக அளவாக ரூ.27,205 கோடி நிதி ஒதுக்கீட்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தியாகிகளின் வாரிசு ஓய்வூதியத் தொகை ரூ.6500 லிருந்து ரூ.7500 ஆக உயர்த்தப்படும். உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்துள்ளது. விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயியாக இருப்பதில் பெருமை அடைகிறேன் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டி உள்ளது. ஜூலை 19-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 

விருதுகள் வழங்கும் விழா;

துணிச்சலுடன் சிறுத்தையை விரட்டி மகளை காப்பாற்றியதற்காக முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த துறைக்கான விருது பத்திரப்பதிவு துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சி விருது திருப்பூருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த நகராட்சி விருது கோவில்பட்டிக்கு முதல்வர் வழங்கினார்.