தமிழக அரசு ஊழியர் ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப்படும்… 5 பேர் கொண்ட குழுவை அமைத்து எடப்பாடி உத்தரவு…
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியவிகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரை குழு அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர்அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியகுழு பரிந்துரைகள் அமல்படுத்தபட்டவுடன், தமிழக அரசு பணியாளர்களுக்கும் ஊதியவிகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு பரிந்துரைத்துள்ள ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருந்திய ஓய்வூதியம் போன்றவற்றை ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுப்படுத்த தக்க அறிவுரை வழங்கபடும் என்றும் இதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தகுழு தமது அறிக்கையை நான்கு மாதத்திற்குள் அளிக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இக்குழுவில் முதன்மை செயலாளர் , நிதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற உள்ளனர்.
