ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தின் ஜைனாபோரா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் உயிரிழந்த தமிழக வீரர் இளையராஜாவின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம், இளையான்கடி அருகே கண்டனி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது பெற்றோர் பெரியசாமி - மீனாட்சி. இளையராஜாவுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்புதான் செல்வி என்பவருடன் திருமணமானது. தற்போது செல்வி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், இளையராஜா உட்பட இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

அவர்களது உடலுக்கு டெல்லியில் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.  இளையராஜா வீரமரணம் அடைந்ததை அடுத்து, அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, 20 லட்சம் ரூபாயை நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இன்று இளையராஜாவின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிற்பகல் மதுரை வந்தடைந்தது. விமான நிலையத்தில், ஆட்சியர் வீரராகவராவ், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர், ராணுவாகனம் மூலம், இளையராஜாவின் உடல், அவரது சொந்த ஊரான கண்டனிக்கு கொண்டு செல்லப்பட்டது. தங்கள் ஊரை சேர்ந்தவர், நாடடுக்காக வீர மரணம் அடைந்ததை அடுத்து கண்டனி கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. தற்போது இளையராஜாவின் உடலுக்கு ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.