விழுப்புரம்

விழுப்புரத்தில் வீட்டு மாடியில், தக்காளி மற்றும் புளிச்சக்கீரை செடிக்கு நடுவில் ரகசியமாக கஞ்சா செடி வளர்த்தவரை காவலாளர்கள் கைது செய்தனர். கஞ்சா செடியையும் அகற்றி பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வி.மருதூர் சுப்புராயலு தெருவில் ஒருவர் தனது வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து வருகிறார் என்ற தகவல் விழுப்புரம் குற்றத்தடுப்புப் பிரிவுக் காவலாளர்களுக்கு புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளார் ஜெரால்டு ராபின்சன் மற்றும் காவலாளர்கள் நேற்று காலை வி.மருதூர் சுப்புராயலு தெருவிற்குச் சென்று அங்குள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு வீட்டின் மாடியில் யாருக்கும் தெரியாத வகையில் தோட்டம் போன்று அமைக்கப்பட்டு இருந்தது. அதில் 50–க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. அதில், ஊடுபயிராக புளிச்சக்கீரை மற்றும் தக்காளி செடிகளை வளர்த்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த வீட்டின் உரிமையாளரை பிடித்த காவலாளர்கள் நடத்திய விசாரணையில் அவர் கண்ணன் மகன் கார்த்திகேயன் (47) என்பதும், கடந்த எட்டு மாதங்களாக தனது வீட்டின் மாடியில் கஞ்சா செடிகள் வளர்த்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து, காவலாளர்கள் கார்த்திகேயனை கைது செய்தனர்.

போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு காவலாளர்களால், கஞ்சா செடிகளை அகற்றி பறிமுதல் செய்யப்பட்டது.