- Home
- Politics
- விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!
கேட்ட தொகுதிகளை கொடுக்கவில்லை என்றால் தமிழக வெற்றி கழகம் பக்கம் தாவி விடலாம் என கணக்குப் போட்டுத்தான் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஐவர் குழுவை அமைத்து அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ்.

ஒரு பக்கம் காங்கிரஸின் ஐவர் குழு திமுகவோடு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திவரக்கூடிய நிலையில், இன்னொரு பக்கம் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசி இருப்பது வருகிற தேர்தலில் காங்கிரஸ் யார் பக்கம் தான் சாயும்? என புரியாத புதிராக மாறி இருக்கிறது. காங்கிரஸ் போடும் கணக்கு என்ன? விஜய் உடனான சந்திப்பு உணர்த்துவது என்ன?
காங்கிரஸின் ஐவர் குழு அறிவாலய ரூட்டில் சென்று கொண்டிருக்கும்போதே காங்கிரசின் பிரதிநிதி பட்டினப்பாக்கத்தில் விஜய் வீட்டில் முகாமிட்டது தான் தற்போது திமுக கூட்டணி கூடாரத்தில் ஹாட் டிராபிக்காக மாறி இருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் தவெக பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாக சில நாட்களாகவே பேச்சு நிலவி வருகிறது. ராகுல் காந்திக்கும், விஜய்க்கும் இருக்கும் நட்பு வருகிற தேர்தலில் கூட்டணியாக மாறுமா? என்ற விவாதமும் சூடு பிடித்து வருகிறது. ஆனால் பீகார் தேர்தலுக்குப் பிறகு இந்த விவாதம் வேறு கோணத்தில் திரும்பி, பீகாரில் படு தோல்வியை சந்தித்த காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருப்பது தான் நல்லது என சில அரசியல் விமர்சகர்கள் கூற, அதற்கு ஏற்ப திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அமைத்தது காங்கிரஸ் மேலிடம்.
இந்த ஐவர் குழு இரண்டு நாட்களுக்கு முன்பாக அறிவாலயம் வந்து முதலமைச்சரை சந்தித்ததோடு காங்கிரஸ் வெற்றி பெற சாதகமான 40 தொகுதிகளை கொண்ட பட்டியலை வழங்கியதாக சொல்லப்பட்டது. இந்த சூழலில் எதிர்பாராத திருப்பமாக ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி பட்டினப்பாக்கம் வீட்டில் வைத்து விஜயை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஐவர் குழு அறிவாலயம் சென்று வந்த தடம் மாறுவதற்குள் ராகுல் காந்தியின் பிரதிநிதியான பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்திருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கே குழப்பத்தை கொடுத்திருக்கிறது. அண்மையில் விஜய்க்கு ஆதரவாக பிரவீன் சக்கரவர்த்தி சமூக வலைதளத்தில் பதிவு போட்டிருந்த நிலையில், தற்போது சந்திப்பும் நிகழ்ந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கரூர் துயர சம்பவத்தின் போது பிரவீன் சக்கரவர்த்தி மூலம்தான் ராகுல் காந்தி விஜயிடம் பேசியதாக கூறப்படும் நிலையில், டெல்லி காங்கிரஸின் தூதுவராக பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்து இருக்கிறார். அதாவது திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என கூறிக் கொண்டே விஜயை சந்தித்து இருப்பதன் மூலம் விஜயை வைத்து திமுகவிடம் டிமாண்ட் ஏற்ற காங்கிரஸ் கணக்கு போடுகிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. என்னதான் தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தற்போது வரை வலுவாக இருந்தாலும் புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க விஜயின் செல்வாக்கு பயன்படும் என கணக்கு போட்டு கூட பிரவீன் சக்கரவர்த்தி விஜய் இடையிலான சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். விஜய், பிரவீன் சக்கரவர்த்தி இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்தது ஆதவ் அர்ஜுனா தான் என்கிறார்கள்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு அடிக்கடி டெல்லிக்கு பறக்கும் ஆதவ் அர்ஜுனா, காங்கிரசின் முக்கிய தலைவர்களை சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருகிறார். இதன் தொடர்ச்சியாகவே விஜய், பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த திருமணத்தில் காங்கிரஸ் எம்.பி., ஜோதி மணியை தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் சந்தித்து பேசிய நிலையில் பொள்ளாச்சி திருமண விழாவில் தவெகவின் புது வரவாக வந்திருக்கும் செங்கோட்டையனும் காங்கிரஸின் திருநாவுக்கரசரும் சந்தித்து பேசிக்கொண்டார்கள். தற்போது பிரவீன் சக்கரவர்த்தியும் விஜயை சந்தித்து பேசியது வருகிற தேர்தலில் காங்கிரஸ் அணிமாறும் முடிவுக்கு வந்துவிட்டதா? என்ற கேள்விக்கு வழி வகுத்திருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட பிரவீன் சக்கரவர்த்தி வாய்ப்பு கேட்டபோது திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு காரணமாக சீட் கிடைக்காமல் போனது. இதனால் திமுக மீது அதிப்தியில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகியும், ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவருமான பிரவீன் சக்கரவர்த்தியின் பட்டினப்பாக்கம் விசிட் திமுக வட்டத்திற்கு கிலியை கிளப்பி இருக்கிறது.
கேட்ட தொகுதிகளை கொடுக்கவில்லை என்றால் தமிழக வெற்றி கழகம் பக்கம் தாவி விடலாம் என கணக்குப் போட்டுத்தான் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஐவர் குழுவை அமைத்து அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ். இது ஒரு பக்கம் இருக்க தேசிய கட்சியான காங்கிரஸை, மாநில கட்சியான திமுக தேர்தலுக்கு தேர்தல் தோளில் தூக்கி சுமப்பதாக ஒரு கருத்து முன் வைக்கப்படுவதுண்டு. அப்படி இருக்கையில் காங்கிரஸ் தவெக பக்கம் சென்றாலும் பெரிய மாற்றம் இருக்காது என்பது திமுக தரப்பினரின் வாதமாக இருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக திமுகவுடன் அங்கமாக இருந்த காங்கிரஸ் தவெக பக்கம் சென்றால் இத்தனை ஆண்டுகளாக இணைபிரியாமல் இருந்த கூட்டணி பிரிந்து, முறிந்து விடும் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.
