இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் இரயில்வே சுரங்கபாதை அமைப்பதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்திய கிராம மக்கள் இரயில் மறியல் செய்தபோது, தங்களை கைது செய்து நடத்தியே காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கோரினர். ஆனால், 95 பேரை காவலாளர்கள் வலுகட்டாயமாக கைது செய்தனர்.

இராமநாதபுரம் அருகே உள்ளது கூரியூர் கிராமம். இந்த ஊரின் அருகில் உள்ள இரயில்வே வாயிலில் சுரங்கப்பாதை அமைக்க இரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு கூரியூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், அவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்துகின்றனர்.

ஆனால், மக்களின் எதிர்ப்பை மீறி இரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மும்முரமாக நடத்தி வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெறவுள்ள நிலையில் நேற்று முன்தினம் “குடும்ப அட்டைகளை ஒப்படைத்து கூரியூர் கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளோம்” என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் சுரங்கப் பாதைக்கான கான்கிரீட் கர்டர்கள் பொருத்தும் முக்கியப் பணிகள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதனை அறிந்த கிராம மக்கள் தங்களின் உணர்வுகளை மதிக்காமல் மத்திய இரயில்வே நிர்வாகம் செயல்படுவதாக கூறி சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இரயில்வே தண்டவாள பகுதியில் நின்று போராடினர்.

நேற்று காலை இராமேசுவரத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற இரயில், கூரியூர் பகுதியில் வந்தபோது போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் இரயிலை மறித்தனர்.

அப்போது தண்டவாளப் பகுதியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் நிற்பதைக் கண்ட இரயில் ஓட்டுநர் இரயிலை சிறிது தூரத்திற்கு முன்பே நிறுத்திவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலாளர்கள், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து வலுகட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அப்போதும், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தியபடி கிராம மக்கள் அந்த பகுதியில் முழக்கமிட்டு நின்றிருந்தனர்.

இதனால் காவலாளர்கள் கடுப்பாகி அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது “நாங்கள் கைதாக தயார்! எங்களை நடைபயணமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்! என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

அதற்கு காவலாளர்கள் மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், பா.ஜ.க. மாநில துணை தலைவர் சுப.நாகராஜன் தலைமையில் காவலாளர்கள், கிராம மக்களை சுற்றி வளைத்து 59 பெண்கள் உள்பட 95 பேரை கைது செய்தனர். அப்போது காவலாளர்கள் வலுகட்டாயமாக வாகனத்தில் ஏற்றியபோது நஜ்மா என்ற மூதாட்டி கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.