“வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் NOTA button வைக்காதது, ரகசியமாக அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் அடிப்படை உரிமையை குடிமக்களிடம் இருந்து பறிக்கும் செயல்."

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா வசதி இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் நிராகரிக்கும் வகையில் நோட்டா (NOTA - None of the above) வசதி தேவை என்ற குரல் 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது. இதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2013-ஆம் ஆண்டில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற வகையில் ஒரு பட்டனை தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக நோட்டா வசதி வாக்குப்பதிவு இயந்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் தேர்தலிலேயே நோட்டாவுக்கு 60 லட்சம் வாக்குகள் நாடு முழுவதும் கிடைத்தன. அதாவது 1.1 சதவீத வாக்குகள் இதில் பதிவானது.

தமிழகத்தில் முதன் முறையாக 2013 ஏற்காடு இடைத்தேர்தலில் நோட்டா வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா வசதி உள்ளது. இந்நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களில் இடம் பெற்ற நோட்டா பட்டன் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனுவை அனுப்பியுள்ளது. அந்த மனுவில், “வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு இயந்திரத்தில் NOTA button வைக்காதது, ரகசியமாக அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் அடிப்படை உரிமையை குடிமக்களிடம் இருந்து பறிக்கும் செயல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உச்சநீதி மன்ற தீர்ப்பை மீறும் செயலாகும். இந்த NOTA button உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்.

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா வசதி உள்ளது. தேர்தலில் நோட்டா வெற்றி பெற்றால், மீண்டும் மறுத்தேர்தல் நடத்தப்படும் என்று அங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஹரியாணாவிலும் உள்ளது. அண்மையில் ஒடிஷாவிலும் உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாநில தேர்தல் ஆணையம் அரசின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை நிலை நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில், இந்தப் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.