கேரள மாநிலத்தில், வயநாடு, பாட்டவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில், சுகாதார துறையினர், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், கேரளாவுக்கு அருகில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய  மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இம்மாவட்ட சுகாதார துறையினர், உஷார்படுத்தப்பட்டு பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவை  பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த சாந்தி என்ற பெண் கடந்த  சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நிலை மோசமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார்.

ஆனால், தொடர்ந்து உடல்நிலை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பன்றிக்காய்ச்சல் காரணமாக சாந்தி உயிரிழந்தார். சாந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, பன்றிக்காய்ச்சல் பரவுவது தொடர்பான பதற்றமான சூழல் மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.