பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறி, அந்த காதலை சுவாதி ஏற்றுக்கொள்ளாததால் கொலை செய்யப்பட்டார். கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட ராம் குமார் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அதே போல, பேஸ்புக் மூலமாக ஏற்பட்ட நட்பே, ஆசிரியை நிவேதாவுக்கும் கணபதிக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது, அதில் ஏற்பட்ட விரக்தியே, நிவேதாவை கார் ஏற்றி கொள்ளும் அளவுக்கு இளையராஜாவை தூண்டியது.  இன்று அவரும் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் ஆரம்ப புள்ளி எதுவென்றால், அது பேஸ்புக்தான். பேஸ்புக்  மூலம் கிடைத்த நட்பும், அதனால் எழுந்த காதலும், கள்ளகாதலும்தான். 

சென்னையில் மென் பொறியாளராக இருந்த சுவாதிக்கு, பேஸ்புக் மூலம் கிடைத்த நட்புதான் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார்.

தன்னை காதலிக்க மறுத்தார் என்ற ஆத்திரத்தில்தான், சுவாதியை, பட்டப்பகலில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி கொன்றார் என்று போலீஸ் விசாரணை கூறுகிறது.

அதை தொடர்ந்து ராம்குமாரை போலீசார் கைது செய்தபோது, அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். 

அதில் காப்பாற்றப்பட்ட ராம்குமார், சிறையில் மின் ஒயரை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று, அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

அதேபோல, கோவையை சேர்ந்த கணவரை பிரிந்த ஆசிரியை நிவேதா, இளைய ராஜா என்ற தீயணைப்பு துறை ஊழியரிடம் சேர்ந்து வாழ்ந்துள்ளார். 

தமக்கு  திருமணம் ஆன பின்னரும் அந்த உறவு தொடந்துள்ளது என்று விசாரணையில் இளையராஜா கூறி உள்ளார். பல மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியையின்  நிலையே இப்படி இருக்கிறது.

அதையும் தாண்டி, முகநூல் மூலமாக அறிமுகம் ஆன கணபதி என்பவருக்கும், ஆசாரியை நிவேதாவுக்கும் கள்ள காதல் இருந்துள்ளது. 

இதை பல முறை கண்டித்துள்ள இளையராஜா, கணபதியுடன் மீண்டும் நிவேதா காட்டிய நெருக்கத்தால், அவர் மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளார்.

கணபதிக்கும் சேர்த்தே குறி வைக்கப்பட்டதாகவும், ஆனால் அதில் அவர் தப்பி விட்டார் என்றும் போலீஸ் விசாரணையில் கூறிய இளையராஜா, புழல் சிறையில், தமது லுங்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த இரண்டு கொலைகள் மற்றும் தற்கொலைகளுக்கு ஆரம்ப புள்ளியே, பேஸ்புக்கில் ஏற்பட்ட நட்புதான். ஒருவர் நட்பை காதல் என்று தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு, சிறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மற்றவர், தன்னுடைய கள்ளக்காதலிக்கு, இன்னொரு கள்ளக்காதலன் இருப்பதை ஏற்க முடியாத ஆத்திரத்தில் அவரை கொலை செய்து விட்டு, தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர்கள், கொலை செய்தவர்கள் என அனைவரும் இப்போது உயிருடன் இல்லை. ஆனால், அவர்களின் குடும்பம் இருக்கிறதே. அவர்கள், தம்மோடு, பழகியவர்களிடம் மீண்டும் சகஜமாக பழகுவதற்கு எவ்வளவு போராட வேண்டும்?

கொல்லப்பட்ட நிவேதாவுக்கு ஒரு பெண் இருக்கிறார், அவர் சென்னையில் படிக்கிறார். அவர், தமது சக தோழிகளிடம், இந்த விஷயத்தை எப்படி பகிர்ந்து கொள்வார்?. 

இந்த சம்பவத்திற்கு பின்னர், அவருடைய  சக தோழிகள் நிவேதாவின் மகளிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? என்றெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கிறதல்லவா?

தனி நபரின், தேவை, விருப்பம் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் நமது குடும்பத்தின் ஒரு அங்கம், நம்முடைய குடும்பம் சமூகத்தின் ஒரு அங்கம் என்பதை மறக்கும் போது, அது வருங்கால தலைமுறையின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்ற உணர்வு அனைவருக்கும் வேண்டும்.