அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே அவர் பதவியேற்றுக் கொண்டார்.

காவிரி விவகாரம் குறித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கன்னடரான சூர்ப்பா, அண்ணா பல்கலைக்கழக
துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக காலியாக இருந்த அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த
நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்து உத்தரவிட்டார்.

சூரப்பா நியமனம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சூரப்பா நியமனத்தின் மூலம் அரசின் பலவீனம் வெட்டவெளிச்சமாகி
இருப்பதாகவும் அவர்கள் கருத்து கூறி வந்தனர். ஆனால், சூரப்பா நியமனத்துக்கு தமிழக அமைச்சர்கள் ஆதரவாக கருத்து கூறி வந்தனர். அதிகாரத்துக்கு
உட்பட்டேதான் துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

துணை வேந்தர் நியமனம் குறித்து சூரப்பா கூறுகையில், என் நியமனம் குறித்து அரசியல் விமர்சனம் செய்வது பற்றி, தான் கருத்துக்கூற விரும்பவில்லை
என்றார். இந்த நிலையில் சூரப்பா, பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

கோவளம் அருகே திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாடக் கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைக்க பிரதமர் மோடி வந்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.