முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு முறையும் புதிய விவாதங்களை நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும் அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் கேரள தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முல்லை பெரியாறு அணை விவகாரம்:
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு முறையும் புதிய விவாதங்களை நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும் அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் கேரள தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கும் விவகாரம் தொடர்பாகவும், அணையின் பாதுகாப்பு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
தொழில்நுட்பக் குழு:
இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, முல்லை பெரியாறு அணை தொடர்பான மேற்பார்வைக் குழுவை தொழில்நுட்பக் குழுவாக மாற்ற பரிந்துரை செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த தொழில்நுட்பக்குழு பரிந்துரை செய்வனவற்றை அந்தந்த மாநில அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக குழு வேண்டுமெனில் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் கூறினர்.
தமிழக அரசு பதில் மனு:
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'முல்லை பெரியாறு அணையில் எதை செய்வது என்றாலும் கேரள எல்லைக்குள் சென்றுதான் மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் நிறைய நேரங்களில் கேரளா எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது,' என வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை இரு மாநிலங்களும் சரிவர கடைபிடிப்பது இல்லை என்று தெரிவித்தார்.
நீதிபதிகள் உத்தரவு:
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், 'மேற்பார்வைக்குழுவின் பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பதாகும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா இடையூறு செய்தால் உச்சநீதிமன்றத்தை தமிழகம் நாடலாம்.இதற்காக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால் கூட அதனை செய்ய தயாராக இருக்கிறோம். கண்காணிப்பு குழு ஒரு தலைப்பட்சமாக நடக்கிறது என மனுதாரர் கூற வேண்டாம். முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் கேரள தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்,' என்று எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
முன்னதாக , முல்லை பெரியாறு அணைக்கு பராமரிப்பு பணிகள் மற்றும் தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம்,குடியிருப்பு, விருந்தினர் மாளிகை ஆகிய கட்டிடங்களில் பராமரிப்பு பணிகளுக்காக தளவாட பொருட்களை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குமளி வழியாக தேக்கடி கொண்டு சென்றனர்.ஆனால் அப்போது, கேரள வனத்துறையினர் தளவாட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி தரவில்லை. மேலும் பெரியாறு புலிகள் காப்பக இயக்குனரிடம் அனுமதி பெற்று வருமாறும் தெரிவித்தனர். இதனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இந்த தகவல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழக விவசாயிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
