சனாதன தர்மம் சர்ச்சை: உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
சனாதன தர்மம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தேசிய அளவில் விவாதங்களை கிளப்பி உள்ளது. அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என நான் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை. சனாதன தர்மம் என்பது சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும். நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன்.” என உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.
இதனிடையே, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் சார்பில் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அதில் இந்து மதம், சனாதன தர்மத்தை குறி வைத்து தகாத முறையில் பேசி அவமதிக்கும் வகையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்தின் 25,26 பிரிவுகள் மீறப்பட்டதாகும். இந்த மாநாட்டிற்கு தமிழீழ விடுதலை புலிகள் போன்ற பயங்கரவாத இயக்கம் மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.” என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து பதிலளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் ஏன் பங்கேற்றார்கள் என்பது குறித்து பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. முதலில் இந்த வழக்கை ஏன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என கேட்ட நீதிபதிகள் பின்னர் வழக்கின் தன்மையை பார்த்து நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.