அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அண்ணாமலையின் பேச்சு இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம் அண்ணாமலை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால், இந்த சம்மனுக்கு எதிராகவும், தனது மீதான புகார் மனுவை ரத்து செய்ய வேண்டும் என அண்ணாமலை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பாஜக கூட்டணியில் இணையும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்!
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அண்ணாமலை மீதான புகார் மனுவை ரத்து செய்ய மறுத்ததோடு, மனு மீதான வழக்கை சட்டத்திற்குட்பட்டு சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அண்ணாமலை மனு குறித்து பியூஸ் மனுஷ் பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.