அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராக பணி புரிந்து வந்த அங்கித் திவாரி என்பவர், மருத்துவர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசி, அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மிரட்டில் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி, மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றபோது, அங்கித் திவாரியை திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் கையும்களவுமாக கைது செய்தனர்.
இதையடுத்து, அவர் தொடர்புடைய இடங்கள், அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அங்கித் திவாரி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!
இதுதொடர்பான வழக்கில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர் விசாரணை நடத்தி குற்ற பத்திரிக்கை தயார் செய்து வருகின்றனர். இதனிடையே, தனக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அங்கித் திவாரி மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்டதையடுத்து, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் அங்கித் திவாரி மனுத்தாக்கல் செய்திந்தார்.
அங்கித் திவாரியின் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுப்பதாக தெரிகிறது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.