ராமர் கோயில் விழாவை திரையிடுவதற்கான கோரிக்கைகளை தமிழக அரசு நிராகரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இதனை பல்வேறு மாநிலங்களில் உள்ள கோயில்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை கோயில்கள் மற்றும் பிற பொது இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப திமுக தலைமையிலான தமிழக அரசு தடை விதித்ததாக கூறி, பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி அவரது வழக்கறிஞர் ஜி.பாலாஜி முறையிட்டார். அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இந்த பொதுநல வழக்கானது அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமர் கோவில் விழாவை திரையிடுவதற்கான கோரிக்கைகளை தமிழக அரசு நிராகரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிற சமூகத்தினர் வசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அனுமதியை நிராகரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளின் தரவை பராமரிக்குமாறு தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. வாய்மொழி உத்தரவை வைத்து எந்த வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், சட்டப்படி எதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதை அனுமதிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால், வழக்கு விசாரணையின்போது, விழாவைக் காட்சிப்படுத்தவோ, சிறப்பு பூஜைகள் அல்லது பஜனைகள் நடத்தவோ தடை இல்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது என்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறையினரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், “தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ அல்லது பூஜைகள் மேற்கொள்ளவோ போலீஸார் அனுமதி தேவையில்லை. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் நேரலையோ அல்லது பூஜையோ மேற்கொள்ள வேண்டுமென்றால் கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும் பின்னர் உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும்.” என உத்தரவிட்டது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கொண்டாட்டம்!

இதுபோன்ற பிரச்சினைகள் நேற்று முதல் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு விழாவையொட்டி, தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும். அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடைவிதித்துள்ளது என தனியார் நாளிதழில் செய்தி வெளியானது.

இதனை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனால், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும், அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்தது. தற்போதும் கூட, விழாவைக் காட்சிப்படுத்தவோ, சிறப்பு பூஜைகள் அல்லது பஜனைகள் நடத்தவோ தடை இல்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. ஆனாலும், தமிழக அரசின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.