Supporting and opposing formation of a sand quarry at the same time
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் மணல் குவாரி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இரு தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஒரு தரப்பினர் விலகிக் கொண்டதால் மற்றொரு தரப்பினரைச் சேர்ந்த 21 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி கிராமத்தில் ஒருவர் மணல் எடுக்க கடந்த 2013–ஆம் ஆண்டு முதல் 2019–ஆம் ஆண்டு வரை நாகை மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருந்தார். அதன்படி அங்கு மணல் குவாரி அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அங்கு மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகார அமைப்பின் தலைவர் ராஜ்குமார் தலைமையில் குவாரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு குவாரி அமைக்க ஆதரவு தெரிவித்து ஏர்வாடிக் கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இரு தரப்பினரிடையே குழு மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் நாகூர் காவல் ஆய்வாளர் நடராஜன், திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளர் அம்சவல்லி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதில் ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விலகினர்.
ஆனால், மக்கள் அதிகார அமைப்பைச் சேர்ந்தவர்கள் மணல் குவாரி அமைத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்று கூறி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 11 பெண்கள் உள்பட 21 பேரை திட்டச்சேரி காவலாளர்கள் கைது செய்தனர்.
