ஏர்செல்-மேக்‍சிஸ் முறைகேடு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்‍கு ஆளாகியுள்ள மாறன் சகோதரர்களின் சன் குழும பன்பலைகளுக்‍கு பாதுகாப்பு அனுமதி வழங்கக்‍ கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரரும், சன் டி.வி. குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது ஏர்செல் - மேக்‍சிஸ் முறைகேடு வழக்‍கு மற்றும் தயாநிதி மாறன் மீது BSNL நிறுவனத்தின் 350-க்‍கும் மேற்பட்ட அதிநவீன தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, அரசுக்‍கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்‍கு உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன.

இதுதொடர்பான வழக்‍குகள் நீதிமன்றங்களில் தற்போது நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, சன் குழுமத்திற்கு சொந்தமான பன்பலைகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி மறுத்துள்ளது. இதுதொடர்பான வழக்‍குகளில் மும்பை மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

ஆகவே, உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளுக்‍கு ஆளாகியுள்ள மாறன் சகோதரர்களின் சன் குழும பன்பலைகளுக்‍கு மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதி மறுத்ததை உறுதி செய்ய வேண்டும் என கோரி, வழக்‍கு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்‍கு, உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்‍கு வரும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.