கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கோர்த்துவிடப்பட்ட ஆறுக்குட்டி எம்எல்ஏ….மரணமடைந்த கனகராஜுடன் என்ன தொடர்பு?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், மரணம் குறித்து விசாரணை நடத்த , அதிமுக ஓபிஎஸ் அணியின் எம்எல்ஏ ஆறுக்குட்டிக்கு ஆத்தூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த மாதம் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டிற்கு புகுந்த 11 பேர் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டும் மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை தாக்கிவிட்டு வாட்ச் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளையில் தொடர்புடையதாக கூறப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சம்பவம் நடைபெற்றற ஒரு சில நாட்களில் சேலம் அருகே நடைபெற்ற விபத்தில் மரணமடைந்தார்.

மற்றொருவர் சயானும் கார் விபத்தில் சிக்கி கோவை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 8 பேர் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் புதிய திருப்பமாக, கனகராஜின் மரணம் குறித்து விசாரணை நடத்த, ஓபிஎஸ் அணியின் எம்எல்ஏ ஆறுக்குட்டிக்கு  ஆத்தூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் நாளை காலை 11 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணமடைவதற்கு முன்பு தனது செல்போன் மூலம் கவுண்டன்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டியை தொடர்பு கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ஓபிஎஸ் அணி எம்எல்ஏ ஆறுகுட்டியை எடப்பாடி அரசு கோர்த்து விட்டிருப்பது அந்த அணியைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவுடன் பிரச்சனை ஏற்பட்டு ஓபிஎஸ் தனி அணி தொடங்கியது முதல் ஆறுக்குட்டி அவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். இந்த நெருக்கமே அவரை காலி செய்யக் காரணமா என கேள்வி எழுந்துள்ளது.