திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த தம்பதி பிரிட்டோ – கலாமேரி . இவர்கள் அங்குள்ள தங்கள் நிலத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு அமைத்தனர். ஆனால் அதில் தண்ணீர் இல்லாததால் லேசாக மூடிவிட்டு அப்படியே விட்டனர்.

பின்னர் இந்த ஆண்டு அந்த நிலத்தில் சோளம் பயிரிட்டுள்ளனர். அண்மையில் பெய்த கனமழையால் அந்த ஆழ்துளைக் கிணற்றில் உள்ள குழி மீண்டும் ஓட்டையாகியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி பிரிட்டோ தம்பதியினரின் இரண்டு குழந்தைகளும்   சோளக்காட்டுக்குள் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டாது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான்.

அவனை மீட்க தமிழக அரசு இயந்திரம் முழுவீச்சில் இறக்கிவிடப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 80 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் சுஜித்தை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குழந்தையை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார், ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

அதே நேரத்தில் மரணமடைந்த சுஜித்தின் பெற்றோருக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும், அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 10 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, சிறுவன் சுஜித் மரணத்துக்கு யார் காரணம் என அதிரடியாக ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

அதாவது சுஜித் சாவுக்கு அவனது அப்பா, அம்மாதான் காரணம் என கூறினார். அந்த விபத்து பொது இடத்தில் நடந்ததல்ல என்றும் அவர்களது சொந்த இடத்தில் நடந்ததால் அதற்கு பெற்றோர்களே முழுப் பொறுப்பு என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிரடியாக தெரிவித்துள்ளார்