Asianet News TamilAsianet News Tamil

ரூ.5000 பணம் கேட்ட போலீசைக் கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்...

suicide threat by youth climbing to cellphone tower against police who asking rs.5000
suicide threat by youth climbing to cellphone tower against police who asking rs.5000
Author
First Published Mar 29, 2018, 8:45 AM IST


புதுக்கோட்டை

புதுக்கோட்டையில், ரூ.5000 பணம் கேட்ட போலீசைக் கண்டித்து செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம், மஞ்சக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (35). இவர் மஞ்சக்குடி பகுதியில் நேற்று முன்தினம் சிலருடன் சேர்ந்து பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஜெகதாப்பட்டினம் காவலாளர்கள் ரோந்து வந்தனர். இதனைப் பார்த்த மோகன் உள்பட சிலர் அங்கிருந்து தப்பியோடினர்.

அந்த இடத்தில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை காவலாளர்கள் கைப்பற்றி ஜெகதாப்பட்டினம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து மோகன் நேற்று முன்தினம் இரவு ஜெகதாப்பட்டினம் காவல் நிலையத்திற்கு சென்று, தனது மோட்டார் சைக்கிளை கேட்டுள்ளார். 

இதற்கு காவலாளர்கள் மோகனிடம் ரூ.5000 கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி திரும்பி வந்துவிட்டார்.

மோட்டார் சைக்கிளை காவலாளர்கள் எடுத்துச் சென்றதால் மனமுடைந்து காணப்பட்ட மோகன் நேற்று காலை 7 மணிக்கு ஜெகதாப்பட்டினத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்த ஒரு செல்போன் கோபுரம் மீது ஏறினார். உச்சிக்கு சென்ற அவர் அங்கு இருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். இதனால் அந்தப் பகுதியில் கூட்டம் கூடியது. 

மேலும், மோகனிடம் மோட்டார் சைக்கிளை காவலாளர்களிம் இருந்து வாங்கி தருவதாக மக்கள் கூறினர். ஆனால், அவர் கீழே இறங்கி வர மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தினார். 

பின்னர் இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் காவலாளர்களுக்கும், தீயணைப்பு படைவீரர்களுக்கும் மக்கள் தகவல் தெரிவித்தனர். 

அந்த தகவலின்பேரில் காவலாளர்கள் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

செல்போன் கோபுரம் அருகே காவலாளர்கள் சென்று மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மூன்றரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு நேற்று காலை 10.30 மணிக்கு மக்கள் உதவியுடன், தீயணைப்பு படை வீரர்கள் செல்போன் கோபுரத்தில் ஏறி மோகனை பத்திரமாக மீட்டு கீழே கொண்டுவந்தனர்.

கீழே வந்ததும் அவர் மயக்கமடைந்தார். பின்னர் அவரை மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவலாளர்கள் அனுப்பி வைத்தனர். இதனிடையில் மோகனின் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதோடு, அதை திருப்பி கொடுக்க பணம் கேட்ட காவலாளரை கண்டித்து அந்த பகுதி மக்கள் ஜெகதாப்பட்டினம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து காவலாளர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மோகனின் மோட்டார் சைக்கிளை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலாளர்கள் உறுதியளித்தனர். 

இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios