முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பூரண நலம் அடைந்து, நடைபயிற்சி மேற்கோண்டு வந்த நிலையில் மிக விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அவரது உடல்நிலை முற்றிலும் குணமடைந்துவிட்டது. அவர் எப்போது விரும்புகிறாரோ அப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்று அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை 5.30 மணியளவில் ஒரு தகவல் சென்னை முழுவதும் பரவியது. முதல்வருடைய உடல்நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்ப்பட்டது என்று தகவல் பரவியது.

இதையடுத்து சென்னை முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அப்போலோ மருத்துவமனையில் திடீரென போலீசார் குவிக்கப்பட்டனர்.

பத்திரிக்கையாளர்கள், கட்சித் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் கூடியதால் அப்போலோ மருத்துவமனையே பரபரப்பு ஆனது.

முதல்வருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிய கட்சித் தொண்டர்கள் கவலையுடன் அப்போலோ வாசலில் குவிந்திருந்தனர்.

இந்தநிலையில், முதல்வர் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிகை ஒன்றை வெளியிட்டது.

அதில், “முதல்வருக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதயநோய் நிபுணர்களும், சுவாசவியல் மருத்துவர்களும், தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து முதல்வர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கவலையுடன் உள்ளனர்.