முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஐஜி ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை குற்றவாளிகளை கைது செய்த நிலையில், இந்த வழக்கில் நவம்பர் 21 அன்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் சுதர்சனம். பெரியபாளையம் அருகே உள்ள தானாகுளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 2001 - 2006ம் ஆண்டு காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுதர்சனம் சிறிது காலம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அன்று சுதர்சனம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து சுதர்சனத்தின் இளைய மகன் சதீஷை தாக்கி அவரை ஒரு தனி அறையில் பூட்டி வைத்தனர். அப்போது அலறி கூச்சலிட்டப்படியே மாடியில் கீழே வந்தார். அப்போது அந்த கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

பின்னர் துப்பாக்கி முனையில் 50 சவரன் தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா கொள்ளை கும்பலை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை மிக தீவிரமாக செயல்பட்டு அடுத்த மாதத்திலேயே கொள்ளையர்கள் யார் என கண்டுபிடித்தது. அதில் முக்கியக் குற்றவாளியை ஓம் பிரகாஷ் என்ற ஓமா, அவரது சகோதரர் ஜெகதீஷ் மற்றும் ராகேஷ், அசோக், ஜெயிந்தர் சிங் ஆகியோரை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ஓம் பிரகாஷ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதை தொடர்ந்து மற்ற 4 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை 15வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவு பெற்ற நிலையில் நவம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.