பல்லடம்,
பல்லடம் அருகே, வருகைப் பதிவு இல்லாததால், தேர்வு எழுத முடியாது என்பதால் பள்ளி மாணவர்கள் 2 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இது குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பல்லடம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். பல்லடம் அருகே உள்ள நாராணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் தமிழரசன் (17). அதே பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் மதன்குமார் (17). இவர்கள் இருவரும் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகின்றார்கள்.
இதில் தமிழரசன் அறிவியல் பிரிவிலும், மதன்குமார் கலை பிரிவிலும் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ்–2 பயின்று வரும் மாணவர்களில் வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்கள், தங்களது பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வர பள்ளி சார்பாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்களில் தமிழரசனும், மதன்குமாரும் இருந்துள்ளனர். இதனால் அவர்களும் தங்களது பெற்றோரை பள்ளிக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்களது பெற்றோரிடம், தேர்வு நேரம் நெருங்கி வருவதால் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பி வைக்குமாறு ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் வியாழக்கிழமை மதியம் வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழரசன், மதன்குமார் உள்பட மாணவர்கள் இருந்துள்ளனர். அப்போது மனமுடைந்த தமிழரசன் மற்றும் மதன்குமார் ஆகிய 2 பேரும் விசம் (சாணிபவுடர்) குடித்து பள்ளியில் மயங்கி கிடந்தனர்.
உடனே ஆசிரியர்கள் மாணவர்களை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டுச் சென்று சேர்த்தனர். மேலும், மருத்துவமனை முன் பள்ளி மாணவர்களும் திரண்டு நின்று கொண்டிருந்தனர். தமிழரசன் மற்றும் மதன்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாணவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–
‘‘வருகை பதிவு குறைவாக உள்ளது. அதனால் நீங்கள் தேர்வு எழுத முடியாது. எனவே ஒரு வெள்ளை தாளில் கையெழுத்து போட்டு தரும்படி ஆசிரியர்கள் கேட்டனர். இதனால் மனமுடைந்த தமிழரசன், மதன்குமார் ஆகியோர் விசம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்’’ என கூறினர்.
இது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:– ‘‘தேர்வு நேரம் நெருங்கி வருவதால் வருகை பதிவு குறைவாக உள்ள மாணவர்களை அழைத்து ஒழுங்காக பள்ளிக்கு வரவேண்டும். ஒழுக்கமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இதனால் மனமுடைந்த மாணவர்கள் விசம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்’’ என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 மாணவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
