விஜய் மல்லையா லண்டன் செல்ல உள்ளது தெரிந்தும் சி.பி.ஐயிடம் தெரிவிக்காதது ஏன் - ராகுல்காந்தி கேள்வி

விஜய் மல்லையா, இந்தியாவை விட்டு வெளியேற அருண்ஜேட்லி மறைமுகமாக உதவி செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இந்தியாவில் இருந்து புறப்படும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகவும், கடனைத் திருப்பி செலுத்துவது குறித்து பேசியதாகவும், விஜய் மல்லையா நேற்று லண்டனில் தெரிவித்திருந்தார். மல்லையாவின் இந்த பேச்சின் அடிப்படையில், மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. 

தாம் ஒருபோதும், மல்லையாவை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று அருண்ஜேட்லி மறுப்பு தெரிவித்தார். விஜய் மல்லையாவை யதேச்சையாக சந்திக்க நேர்ந்ததாகவும் அருண்ஜேட்லி விளக்கமளித்திருந்தார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அருண்ஜேட்லியை சந்தித்தாக விஜய் மல்லையா கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார். 

தம்முடைய சந்திப்புகள் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் எழுதும் அருண்ஜேட்லி, இந்த சந்திப்பு குற்த்து ஏன் எழுதவில்லை என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

ஒரு சில வார்த்தைகள் மட்டுமே மல்லையா தம்மிடம் பேசியதாக அருண்ஜேட்லி கூறியது பொய் என்றும் அவர் குற்றம் சாட்டினார். தப்பியோடிய நபர், மத்திய நிதியமைச்சரிடம் பேசியபோது, தாம் லண்டனுக்கு செல்லப் போவதாக கூறியிருந்தும், அந்த தகவலை சிபிஐ, காவல்துறைக்கு அருண்ஜேட்லி ஏன் தெரிவிக்கவில்லை என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். 

குற்றவாளி நாட்டைவிட்டு செல்வதற்கு நிதியமைச்சர் உடந்தையாக இருந்திருக்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு பொய் சொல்கிறது.விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற நிதியமைச்சர் இலவச பாஸ் வழங்கியுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.