Sub-inspector kicked girl who taken for investigate

திருவாரூர்

திருவாரூரில் பெண் உதவி ஆய்வாளர் விசாரணைக்கென அழைத்து சென்று பெண்ணை வயிறு, நெஞ்சிப் பகுதியில் உதைத்து சரமாரியாக தாக்கிய உள்ளார். 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விட்டுக்கட்டியைச் சேர்ந்தவர் அண்ணாதாசன் (30). விவசாயியான இவருடைய மனைவி புவனேஸ்வரி (28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

ஆலத்தம்பாடியைச் சேர்ந்த மகேஸ்வரிக்கும், புவனேஸ்வரிக்கும் பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்சனை இருந்தது. இது தொடர்பாக ஆலிவலம் காவல் நிலையத்தில் மகேஸ்வரி புகார் கொடுத்தார். ஆனால், காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்யவில்லையாம்.

இந்த நிலையில் திருவாரூரில் பணியாற்றும் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், விட்டுக்கட்டிக்கு வந்து அங்குள்ள அண்ணாதாசனிடம், உனது மனைவி புவனேஸ்வரி எங்கே? அவர் மீதும், உன் மீதும் வழக்கு ஒன்று உள்ளது என்று கூறி அண்ணாதாசனை தாக்கினார்.

அப்போது அண்ணாதாசன், குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனது மனைவி புவனேஸ்வரி, குழந்தையுடன் உள்ளார் என்று கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து அந்த உதவி ஆய்வாளர் திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த புவனேஸ்வரியை வலுக்கட்டாயமாக திருவாரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சரமாரியாக அடித்துள்ளார். இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவலறிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தமயந்தி, ஒன்றிய தலைவர் தமிழ்செல்விராஜா, ஒன்றிய செயலாளர் குருமணி, ஒன்றிய துணை செயலாளர் சுஜாதா, ஒன்றியக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புவனேஸ்வரியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

அதன்பின்னர் மாதர் சங்கத்தினர் கூறியது: "விசாரணைக்கு அழைத்துச் சென்று ஒரு பெண் என்றும் பாராமல் வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் உதைத்து சித்ரவதை செய்த உதவி ஆய்வாளரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். 

அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட புவனேஸ்வரிக்கு நிவாரணமாக ரூ.5 இலட்சம் அரசு வழங்க வேண்டும்.

இந்த சம்பவத்தை கண்டித்து வருகிற 20-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மாதர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் மற்றும் காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப்படும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.