Asianet News TamilAsianet News Tamil

சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பணியாற்றிய சப் -இன்ஸ்பெக்டர் கார் விபத்தில் பலி...

Sub inspector died in car accident who worked in search of veerappan
Sub inspector died in car accident who worked in search of veerappan
Author
First Published Jul 2, 2018, 8:10 AM IST


தூத்துக்குடி

சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் சென்ற கார் மரத்தில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் பால்ஐசக் (50). நாசரேத் ஞான்ராஜ் நகரில் வசித்து வந்த இவர் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பால்ஐசக் தனது காரில் திருச்செந்தூர் - குலசேகரன்பட்டினம் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். காரை, பால்ஐசக்கின் நண்பரான கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்த ராஜா (40) என்பவர் ஓட்டினார்.

திருச்செந்தூரை அடுத்த கல்லாமொழி அருகே சென்றபோது, ராஜாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இருந்த மரத்தில் அதிபயங்கரமாக மோதியது. இதில் கவிழ்ந்த காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பால்ஐசக் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். 

இதுகுறித்த தகவலறிந்த குலசேகரன்பட்டினம் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பால்ஐசக்கை மீட்டனர். அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பால்ஐசக் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் ராஜா இலேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இறந்த பால்ஐசக்குக்கு பியூலா என்ற மனைவியும், கிங்ஸ்டன் என்ற மகனும், ஸ்வீட்லின் சுசிலா என்ற மகளும் உள்ளனர். பியூலா நாசரேத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பலியான பால்ஐசக் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். 

இந்த விபத்து குறித்து குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார். 

இறந்துபோன பால்ஐசக், சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் டபிள்யூ.தேவாரத்துடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios