போலீஸ் நிலையத்துக்கு வந்த வழக்கறிஞர் ஒருவரை, சப் இன்ஸ்பெக்டர் கடுமையாக தாக்கி அவருடன் செல்போன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தட்டாடர்மடம் போலீஸ் நிலையத்துக்கு, வழக்கறிஞர் பெரியசாமி என்பவர் தன்னுடைய கட்சிக்காரருடன் புகார் செய்ய சென்றிருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம், வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக, புகார் கொடுத்த நபரை சமரசமாக செல்வதாக எழுதித்தரும்படி கேட்டுள்ளார். 

புகாருக்கு சிஎஸ்ஆர் ரசீது தரும்படி வழக்கறிஞர் பெரியசாமி கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில்  வழக்கறிஞரை, சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் கண்மூடித் தனமாக தாக்கியுள்ளார்.  பெரியசாமியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தவண்ணம் இருந்தது. இந்த நிலையில், ரத்தம் கொட்டும் முகத்துடன் நின்றிருந்த வழக்கறிஞரைத் தன்னுடன் செல்பி எடுக்க கூறியுள்ளார் சப் இன்ஸ்க்டர்.  வழக்கறிஞரும், வேதனையுடனே செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் இன்ஸ்பெக்டர் சுந்தரம். 

இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், உயர்நீதிமன்றம் நீதிபதியிடம் கூறினார். இது குறித்து உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும் அந்த செல்பி படத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

இந்த படத்தை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது போன்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்க முடியாது. வழக்கறிஞரை தாக்கியதுடன் செல்ஃபியும் எடுப்பாரா என்று நீதிபதிகள் கோபமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்கிறோம். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.