மிக்ஜாம் புயல்: உடனடி நிவாரணம் வழங்குக - நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்!

மிக்ஜாம் புயல் பேரிடரில் இருந்து மீள  உடனடி நிவாரணத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்

Su venkatesan mp urges union Govt to provide immediate relief fund for cyclone Michaung calamity smp

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத பெருமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக அதிகமான மழைப்பொழிவை சந்தித்தன. இதன் காரணமாக, இந்த 4 மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு தனது தொகுப்பின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கும் மாநில பேரிடர் மீட்பு பணிகளுக்கான SDRF நிதியின் கீழ் தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.450 கோடியும், சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்திற்கும் ரூ.561 கோடியும் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பேரிடரில் இருந்து மீள  உடனடி நிவாரணத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை என்ற அடிப்படையில் பேசிய மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், பேரிடரிலிருந்து மீள உடனடி நிவாரணத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: “கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத அளவு பெரும் மழை வெள்ளத்தால் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த பேரிடரிலிருந்து மக்கள் உடனடியாக மீள வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 5060 கோடி சிறப்பு நிதியை இடைக்காலத்தில் உடனடியாக வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஒன்றிய அரசு உடனடியாக இந்த உதவியை தமிழகத்திற்கு செய்ய வேண்டும். 

 

 

திட்டமிடப்படாமல் பெரும் வீக்கத்திற்கு உள்ளாகி இருக்கிற இந்திய பெரு நகரங்களில் மிக முக்கியமான நகரம் சென்னை. பேரிடர்களிலிருந்து மீள முக்கியமான சுவாசம் உடனடி நிவாரணம் தான். எனவே ஒன்றிய அரசு உடனடியாக இந்த நிவாரணத்தை வழங்க வேண்டும். 

அதேபோல மூன்று தொழிற்பேட்டைகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.  சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பாதிப்பு அதிகம். இந்தியாவிலேயே அதிகமான ஜிஎஸ்டி கட்டுகிற மாநிலம் தமிழகம். எனவே  சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இந்த அவையிலே நான் கோரிக்கை வைக்கிறேன். 

 அதேபோல நான்காம்(04.12.2023) தேதி பெருவெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது ஆனால் ஆறாம் தேதி யுஜிசி நெட் தேர்வுகள் சென்னையில் நடத்துகிறது. நாட்டிலே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிற துறையாக கல்வித்துறை இருக்கிறதா என்ற கேள்வி எழுப்ப விரும்புகிறேன். பல மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் அந்த தேர்வினை எழுத முடியவில்லை எனவே உடனடியாக மறு தேதி நிச்சயித்து யுஜிசி நெட் தேர்வினை சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இடைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios