புதுக்கோட்டை

நெடுவாசலில் போராடும் மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்தது கல்லூரி நிர்வாகம்.

நெடுவாசலில் ஐட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்திற்கும், தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், “விவசாயிகளை காப்போம். நெடுவாசல், கதிராமங்கலத்தை மீட்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.

கடந்த இரண்டு நாள்களாக இந்தப் போராட்டம் நடந்துவந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்துள்ளது. அங்குப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும் கலைந்து போகும்படி கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாணவர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த விடுமுறை அறிவிப்பு என்று மாணவர்கள் தெரிவித்தனர்.