Students need to work harder in the community - Scientist V.dilibabu advised ...

தூத்துக்குடி

மாணவர்கள் பலயுத்திகளை கையாண்டு சமூகத்தில் நிலவும் பற்றாக்குறையை களைய பாடுபட வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அமைப்பின் விஞ்ஞானி வி. டில்லிபாபு அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு மாணவர், மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அமைப்பின் விஞ்ஞானி வி.டில்லிபாபு.

இந்த நிகழ்ச்சியில், அண்ணாப் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளான திருநெல்வேலி மண்டல கல்லூரி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் உறுப்பு கல்லூரியைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் 1049 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

அப்போது விஞ்ஞானி வி.டில்லிபாபு பேசியது:

“மாணவர்கள் தங்களது அறிவை, திறமையை, நேரத்தை சமுதாயத்திற்கு பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் கடினமாக உழைத்து தங்களுக்கு ஏற்படும் தோல்விகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

பொறியியல் பட்டதாரிகள் விவசாயம், பசுமைப் புரட்சி, நீர்ப்பாசனம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும். 

இன்றையக் காலக்கட்டத்தில் 50 சதவீத இளைஞர்கள் நவீன செல்போனில் தங்களது நேரத்தை செலவழித்து வருகின்றனர். அது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு பாதுகாப்பு துறை உபகரணங்களை வடிவமைத்து உருவாக்குவது மட்டுமல்லாது சமுதாயத்துக்கும் பல்வேறு தொண்டுகளை செய்துள்ளது.

கலாம் ராஜன் ஸ்டன்ட் என்ற கருவி கடல் ஆராய்ச்சி துறைக்கு மட்டுமல்லாது மருத்துவத் துறையிலும் பயன்படுகிறது.

தற்போது பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் பலயுத்திகளை கையாண்டு சமூகத்தில் நிலவும் பற்றாக்குறையை களைய பாடுபட வேண்டும்” என்று அவர் பேசினார்.

இந்த விழாவில், சென்னை கிண்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் டி.வி. கீதா, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி உமா, கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி இளங்கோ, திருநெல்வேலி மண்டல கல்லூரி முதல்வர் சக்திநாதன், நாகர்கோவில் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் வி.எஸ். பிள்ளை, தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.