அரியலூர்

அனிதாவின் சாவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அரியலூரில் பல்வேறு இடங்களில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவ படிப்பு படிக்க முடியாததால் அரியலூர் மாணாவி அனிதா தற்கொலைச் செய்துகொண்டார்.

அனிதாவின் சாவுக்கு காரணமான மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், அரியலூர் அரசுக் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து பிரதான வாசல் வழியாக ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், அனிதாவின் சொந்த ஊரான குழுமூரில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தெருவில் அமர்ந்து மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலைக் கல்லூரி எதிரே வகுப்புகளைப் புறக்கணித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரியும், தற்கொலை செய்துகொண்ட அனிதாவுக்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மாணவ, மாணவிகள் முழக்கமிட்டனர்.