மதுரை

மாணவர்கள் தனித் திறமைகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே இன்றைய சவால்களை சமாளிக்க முடியும் என்று மதுரை காமராசர் பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஓ.ரவி தெரிவித்தார். 

மதுரை மாவட்டம், பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியின் 52-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலர் என்.தியாகராசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மு.கண்ணன் வரவேற்றார். 

இதில், மதுரை காமராசர் பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஓ.ரவி 
மாணவ, மாணவியர் 582 பேருக்கு பட்டம் வழங்கினார்.

அப்போது அவர், "இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்கள் உயர்கல்வி கற்க வேண்டும். மேலும், விருப்பமான பாடங்களில் எவ்வளவு தான் திறமையாக செயல்பட்டாலும், சில தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

தற்போது நமது நாட்டில் அதிகமான பட்டதாரி மாணவர்கள் உருவாகியுள்ளனர். ஆனால், அவர்கள் யாருக்கும் எந்த துறையிலும் தனித் திறமைகள் இல்லை. 

எனவே, வரும் காலங்களில்  மாணவர்கள் தனித் திறமைகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே இன்றைய சவால்களை சமாளிக்க முடியும்" என்று அவர் கூறினார். 

இந்த பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.