ஈவ் டீசிங் குறித்து கலெக்டரிடம் புகார் அளித்த மாணவி, திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே சடையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மகள் கோமதி (16). கொங்கணாபுரம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இந்நிலையில், கொங்கணாபுரம் பகுதியில் மாவட்ட கலெக்டர்  ரோகிணி, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டிருந்தார். அப்போது, கலெக்டரிடம், மாணவி கோமதி ஒரு மனு கொடுத்தார்.

 

அந்த மனுவில், தான் பள்ளிக்கு செல்ல முடியாத படி அதே பகுதியை சேர்ந்த சிலர் தன்னை கேலி, கிண்டல் (ஈவ்டீசிங்) செய்வதுடன், தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாக கூறியிருந்தார். மேலும் அவர்கள் மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாகவும், இதனால் தேர்வு எழுத செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வீட்டிலேயே இருந்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

மாணவிக்கு ஆறுதல் கூறிய கலெக்டர் ரோகிணி, உடனடியாக சம்பந்தப்பட்ட போலீசாரை அழைத்து, மாணவியிடம் அத்துமீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் நேற்று மாலை கோமதி வசிக்கும் பகுதிக்கு சென்ற போலீசார் விசாரித்து சென்றனர்.

போலீசார் ன்ற சிறிது நேரத்தில், மதி வீட்டுக்கு சென்ற சிலர், அவரை மிரட்டிவிட்டு சென்றதாகவும், புகாரை திரும்ப பெற சொல்லி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோமதி, கடும் மன வேதனை அடைந்தார். இரவு அனைவரும் சாப்பிட்டு தூங்க சென்றனர். இன்று அதிகாலையில், பெற்றோர் எழுந்து பார்த்தபோது கோமதியை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். வெளியே வந்து பார்த்தபோது, வாயில் நுரை தள்ளியபடி, மயங்கி கிடந்ததை கண்டு கதறி அழுதனர். அவர் விஷம் குடித்து மயங்கியது தெரிந்தது. 

உடனடியாக அவரை மீட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி கோமதியை வீட்டுக்கு சென்று மிரட்டிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.