student returned because not allowed to writer neet exam while having hall ticket

வேலூர்

நுழைவு சீட்டு இருந்தும் தேர்வு மைய பட்டியலில் பெயர் இல்லாததால் ஆம்பூர் மாணவி ‘நீட்’ தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாணவியும், அவரது தந்தையும் மருத்துவ கனவு தகர்ந்ததை எண்ணி கண்ணீர் சிந்தியபடி திரும்பி சென்றனர்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. இதற்காக வேலூர் மாவட்டம் முழுவதும் 14 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இங்கு தேர்வு எழுத வேலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 54 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். 

இந்த நிலையில் காட்பாடி சன்பீம் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு ஆம்பூர் தாலுகா தோட்டாளம் கிராமத்தை சேர்ந்த மாணவி பிரதிக்‌ஷா (17) தனது தந்தை குமாருடன் வந்தார். 

மாணவியை அதிகாரிகள் முதலில் சோதனைக்கு உட்படுத்தினர். பின்னர் தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் மாணவி பிரதிக்‌ஷா பெயர் உள்ளதா? என்று அதிகாரிகள் பார்த்தனர்.

அந்த பட்டியலில் மாணவியின் பெயரும், தேர்வு எண்ணும் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் மாணவி பிரதிக்‌ஷாவை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அப்போது மாணவி தனக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அனுப்பிய ஹால்டிக்கெட்டை காண்பித்து, அதில் இந்த தேர்வு மையத்தில்தான் தனக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். அவருடைய தந்தையும் அதிகாரிகளிடம் தனது மகளை தேர்வு எழுத அனுமதிக்குமாறு வேண்டினார்.

ஆனால், தேர்வு மைய பட்டியலில் பெயர் இல்லாததால் மாணவியை உள்ளே அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக கூறினர். 

இதனால் மனவேதனை மற்றும் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை குமார், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வேலூர் மாநகர ‘நீட்’ தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுஜாதாவிற்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 தேர்வு மையங்களில் மாணவி பிரதிக்‌ஷாவின் பெயர் உள்ளதா? என்று ஆய்வு செய்தார். ஆனால், எந்த மையத்திலும் அவரது பெயர் இல்லை. 

இதனையடுத்து சுஜாதா, டெல்லியில் உள்ள சி.பி.எஸ்.இ. அலுவலகத்தை தொடர்பு கொண்டு, மாணவி பிரதிக்‌ஷாவின் பெயர் தமிழ்நாட்டில் வேறு ஏதாவது மாவட்டத்தில் உள்ளதா? என கேட்டார். அவர்களும் ஆய்வு செய்துவிட்டு எந்த மாவட்டத்திலும் பிரதிக்‌ஷாவின் பெயர் இல்லை என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவிக்கும் அவரது தந்தை குமாருக்கும் தெரிவிக்கப்பட்டது. தனது மருத்துவ படிப்புக்கான கனவு தகர்ந்ததால் மாணவி பிரதிக்‌ஷா கண்ணீர்விட்டு அழுதார். அதனைக் கண்ட குமாரும் அழுதார். இதைக் கண்ட பிற மாணவ-மாணவிகளின் பெற்றோர் வருத்தம் அடைந்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் மாணவியும், அவரது தந்தையும் கண்ணீருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.