30 நாட்களாக வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி தண்டனை கொடுத்ததால் அவமானம் அடைந்து , மனமுடைந்த 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம், பெரிய குளத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனைக் கண்ட மாணவியின் பெற்றோர், அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து மாணவியிடம் விசாரித்துள்ளனர்.
சாதி சான்றிதழ் இல்லாததால், பள்ளி ஆசிரியர் கடந்த 30 நாட்களாக பள்ளி வகுப்பறைக்கு அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி வைத்துள்ளார். இதனால், அந்த மாணவி அவமானத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். பள்ளி பாடங்களையும் கவனிக்க முடியாத விரக்தி, மற்ற மாணவிகள் முன்னால் அவமானம் எல்லாம் சேர்ந்து தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதனைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். மாணவியின் தற்கொலை முயற்சிக்கு ஆசிரியரே காரணம் என கூறி பெற்றோர், போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
