ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் தற்கொலை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவினர் அளித்த அறிக்கையைக் கண்டித்து, திருத்தணியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ரோஹித் வெமுலா (26) தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரூபன்வால் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, அக்குழுவினர் அண்மையில் அளித்த அறிக்கையில் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைக் கண்டித்து, பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லூரி மாணவர் அமைப்பு சார்பில் வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து நீதிபதி ரூபன்வால் குழுவின் அறிக்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசியல் நெருக்கடி காரணமாகவே ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.