ஆண்டாள் கோவில் கோபுரத்தையும் விட்டுவைக்காத மாணவர்கள்… நீட் தேர்வை எதிர்த்து  கோபுரத்தின் மேல் ஏறி போராட்டம்…

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் டாக்டருக்கு படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம்  முழுவதும் தன்னெழுச்சியாக திரண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று மதுரை தமுக்கம் மைதானத்தில்  மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் புகழ்பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவில் கோபுரத்தின் மீது ஏறிய 22 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு நின்று கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மாணவர்களை கோபுரத்தில் இருந்து இறங்க வைக்க  முயற்சி செய்தனர். ஆனால் மாணவர்கள் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கோபுரத்தில் இருந்து இறங்க வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.