Asianet News TamilAsianet News Tamil

தவறான அறுவை சிகிச்சையால் மாணவி மரணம்; உறவினர்கள் மறியல்…

student killed-by-wrong-operaion-relations-held-in-road
Author
First Published Dec 5, 2016, 10:43 AM IST


திருச்சி,

திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இறந்ததால், அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி கீழவாளாடியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (43) ஆட்டோ ஓட்டுநர். இவருடைய மனைவி பாரதி. இவர்களுக்கு நளினி (17) என்ற மகளும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர்.

நளினி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.சி. மகளிர் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார்.

இவர் கடந்த சில நாள்களாக தலை வலி மற்றும் கண் வலியால் அவதிப்பட்டு வந்தார். உடனே அவரை திருச்சியில் ஒரு கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு தலையினுள் பின்பக்கத்தில் கட்டி இருந்தது தெரியவந்தது.

அந்த கட்டியை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து, நளினியை 2 நாள்களுக்கு முன்பு சத்திரம் பேருந்து நிலையம் அருகே கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ‘நியூரோ ஒன்’ மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு நளினியை பரிசோதித்துவிட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால் அந்த கட்டியை அகற்றிவிடலாம் என்றும், இதற்கு ரூ.1½ இலட்சம் வரை செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பகல் நளினிக்கு தலையில் இருந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறிதுநேரம் கழித்து வந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்போது அவர் இறந்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதனை கேட்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தங்கள் மகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் அவர் இறந்ததாக கூறி மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டனர். உடனே கோட்டை காவலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல் இன்ஸ்பெக்டர் சீதாராமன் தலைமையில் ஏராளமான காவலாளர்கள் மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டனர்.

அப்போது ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சீதாராமன் மற்றும் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து முறைப்படி புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களிடம் தெரிவித்தனர். அதன்பிறகு அவர்கள் மறியலை கைவிட்டனர்.

பின்னர், மாணவியின் தந்தை ஆனந்தகுமார் கோட்டை காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், “மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

புகாரை பெற்ற கோட்டை காவலாளர்கள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். மாணவியின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios