student injured in electricity at government school panchayat management is the reason ...
தருமபுரி
அரசுப் பள்ளியில் மின்சாரம் மூலம் தண்ணீர் உறிஞ்ச வேண்டாம் என்று பலமுறை புகார் கொடுத்தும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி மாணவன் பலத்த காயம் அடைந்தான்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள பெரும்பாலை அரசு மேல் நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளி வளாகத்தில், அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டு மின்சாரம் மூலம் தண்ணீர் உறிஞ்சி டேங்க் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்ச மின்சாரம் பயன்படுத்துவது மாணவர்களுக்கு ஆபத்தாக உள்ளதாகவும், இதனைப் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே அமைக்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இதை பஞ்சாயத்து நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் சாணாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து என்பவரின் மகன் பாரத் (15) பெரும்பாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த பாரத் மாலை 5 மணிக்கு பள்ளி வளாகத்தில் இருந்த மக்களுக்கு வழங்கும் குடிநீர் குழாய் அருகே அமர்ந்துக் கொண்டிருந்தானாம். அப்போது எதிர்பாராதவிதமாக குடிநீர் குழாயின் இரும்பு பைப்பில் இருந்து மின்சாரம் தாக்கி மாணவன் பாரத் தூக்கி வீசப்பட்டான். இதில், பாரத் பலத்த காயம் அடைந்தான்.
இதனைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள் பாரத்தை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். பின்னர் மாணவனின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு அவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பள்ளி மாணவர்களிடையஸ்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணற்றிலிருந்து மின்சாரம் மூலம் குடிநீர் எடுப்பதை பள்ளி வளாகத்தை விட்டு வெளியே அமைக்க வேண்டும் என்று பெற்றோர்களும், மக்களும் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
