தந்தையின் குடி பழக்கத்தால் மனமுடைந்து, நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தினேஷ் ப்ளஸ்2-வில் எடுத்த மார்க்குகளைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதி கே.ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் நல்லசிவன் (17). இவரது தந்தை மாடசாமி. இவர் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர். மாடசாமி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். தந்தையின் குடிப்பழக்கத்தால் மன உளைச்சலில் தினேஷ் மனை உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

ப்ளஸ் 2 தேர்வெழுதிய தினேஷ், நீட் தேர்வுக்காக தயாராகி வந்திருந்தார். இந்த நிலையில் தந்தையின் குடிப்பழக்கத்தை திருத்த முடியாத சோகத்தில் இருந்த தினேஷ் கடந்த 2 ஆம் தேதி, நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில், அப்பா.. நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு. நான் இறந்த பிறகு எந்தக் காரியமும் செய்யக் கூடாது. இதன் பிறகாவது குடிக்காமல் இருந்தால்தான் எனது ஆன்மா சாந்தியடையும். நான் இறந்த பிறகாவது நாட்டின் பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கிறார்களா என்று  பார்ப்போம் இல்லாவிட்டால் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன் என்று எழுதப்பட்டிருந்தது. தினேஷின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், நேற்று ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தினேஷ் எடுத்துள்ள மதிப்பெண் விவரம் வெளிவந்துள்ளது. அவர் 1024 மார்க் எடுத்ள்ளார். தமிழ்ப்பாடத்தல் 194 மார்க்குகளும், ஆங்கிலத்தில் 148 மார்க்குகளும், இயற்பியலில் 186 மார்க்குகளும், வேதியலில் 173 மார்க்குகளும் உயிரிலில் 129 மார்க்குகளும், கணிதத்தில் 194 மார்க்குகளும் எடுத்துள்ளார்.

இது குறித்து தினேஷின் உறவினர் ஒருவர் கூறும்போது, நன்றாக படிக்கக் கூடிய தினேஷ், மருத்துவத்துக்கான நீட் தேர்வினை சிறப்பாக எழுதி டாக்டராக வேண்டும் என்பது எங்களுடைய ஆசையாக இருந்தது. அதற்காக அவனும் சிறப்பாக தேர்வுக்கு தயாராகி வந்தான். இந்த நிலையில் ப்ளஸ்2 முடிவு வெளிவராத நிலையில் அவன் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவனது ப்ளஸ்2 மாக்குகளைப் பார்த்த அவனது குடும்பத்தினர் மிகுந்த சோகமாகி உள்ளனர். அவரது தந்தை மாடசாமி, தினேஷ் பெற்ற மார்க்குகளைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.