student Died who fallen in school Doctors not in work to give treatment
கடலூர்
கடலூரில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த எட்டாம் வகுப்பு மாணவியை சிகிச்சை கொண்டு சென்றபோது மருத்துவர்கள் பணியில் இல்லாததால் உயிரிழந்தார். இதனால் மாணவர்கள், மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள சு.கீணனூர் அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45). கேரளாவில் கூலி வேலை செய்துவரும் இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுக்கு நிர்மலா (15), மகாலட்சுமி (13) என்ற இரண்டு மகள்களும், கமலகண்ணன் (11) என்ற மகனும் உள்ளனர்.
இவர்களில் மகாலட்சுமி கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று வழக்கம்போல பள்ளிக்கு சென்றபோது பள்ளி வளாகத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
ஆனால், அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லை. இதையடுத்து அங்கிருந்த செவிலியர்கள், அந்த மாணவியை பரிசோதனை செய்தனர். அப்போது அந்த மாணவி இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். மகாலட்சுமியின் தாய் மற்றும் உறவினர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பதறி அடித்துக் கொண்டு வந்தனர். அங்கு மகாலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த நிலையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால்தான் மகாலட்சுமி இறந்துவிட்டதாக கூறி மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று திரண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கம்மாபுரம் காவலாளர்கள் மற்றும் விருத்தாசலம் தாசில்தார் ஸ்ரீதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து காவலாளர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் உடலை காவலாளர்கள் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் மாணவி எதனால் மயங்கி விழுந்து இறந்தார்? என்பது குறித்து காவலாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
