student died who came by motorbike hits by government bus driver escaped
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து மோதி மோட்டார் சைக்கிளில் வந்த கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய பேருந்து ஓட்டுநரை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (18). இதே பகுதியைச் சேர்ந்தவர் ரோசித் (18 ) நண்பர்களான இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ராஜகுளத்திற்கு வந்தபோது, அதே திசையில் பின்னால் வந்த ஒரு அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது அதிபயங்கரமாக மோதியது.
இதில் நவீன்குமார் மற்றும் ரோசித் பைக்குடன் தூக்கிவீசப்பட்டனர். இதில், ரத்த வெள்ளத்தில் நவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரோசித் பலத்த காயம் அடைந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அரசு பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
