கல்லூரி அருகில் நண்பர்களுடன் குட்டையில் ஜாலியாக குளித்த ஆர்கிடெக்ட் பயிலும் மாணவர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை , அண்ணாநகரில் வசித்தவர் விக்ரம் வெங்கடேஷ். சோழிங்க நல்லூர் அருகே ஈகாட்டூரில் உள்ள ஆர்க்கிடெக்ட் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

 நேற்று, கல்லூரி முடிந்தவுடன் நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழித்தார் விக்ரம். அப்போது கல்லூரி அருகில் உள்ள குட்டை ஒன்றில் குளிக்கலாம் என நண்பர்கள் முடிவெடுத்தனர். தனக்கு நீச்சல் தெரியாவிட்டாலும் குட்டைத்தானே ஜாலியாக இருக்கும் என்று விகரமும் நண்பர்களுடன் குளிக்க சென்றார்.

குட்டையில் இறங்கி குளிக்க ஆரம்பித்தவுடன் குட்டையின் ஆழம் தெரியாமல் உள்ளே மூழ்க துவங்கினார் விக்ரம். பின்னர் குட்டை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். நண்பனை காணவில்லை என்று சக மாணவர்கள் தேடிய போது விக்ரம் நீரில் மூழ்கி இறந்து போனது தெரியவந்தது.

உடனடியாக அவரை குட்டையில் இருந்து தூக்கி வெளியே கொண்டு வந்தனர் . அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் இறந்துபோனது கல்லூரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்கு இன்றுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.